சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெற்றனர். நடப்பு நிதியாண்டில், 20 ஆயிரம் பேர் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது, 2020 மே மாதம் 59 ஆகவும், அடுத்த ஆண்டில் 60 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வு பெற வேண்டியவர்கள் தங்கள் பணியை தொடர்ந்தனர். இந்நிலையில், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
‘ஏற்கனவே ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு பறிபோகிறது’ என எதிர்ப்பு எழுந்தது. இதற்கிடையே, ஓய்வு வயது உயர்த்தும் எண்ணம் இல்லை என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மே 31ம் தேதியுடன் (நேற்று) ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்று வருவார்கள். குறிப்பாக மே மாதங்களில் தான் அதிகம் பேர் ஓய்வு பெறுவார்கள்.
இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். சென்னையில் தமிழக அரசின் துறைகளில் தற்போதைய நிலையில் 9,42,941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும்போது மே மாதங்களில் தான் ஓய்வு பெறுவார்கள். அதாவது மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4,399 பேரும், சி பணியிடங்களில் 2,185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள்.
கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் ஓய்வு பெறுவது இதுவே அதிக எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம். சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை நேற்று ஓய்வு பெற்றார்கள். தமிழகத்தில் மட்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்கனவே, லட்சத்துக்கும் மேல் காலியாக உள்ளதாகவும், அதை நிரப்ப வேண்டும் என்றும் பல்வேறு சங்கங்கள் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், அடுத்தடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதால், அரசு பணியிடங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.நடப்பு நிதியாண்டில் மட்டும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெற உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று ஏராளமானோர் ஓய்வு பெற்றதால், அவர்களுக்கு ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க வேண்டி உள்ளது. இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.