சென்னை: தமிழ்நாட்டில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது. கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் வகுப்பறைக்கு ஆர்வமுடன் வந்திருந்தனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமை தாங்கினார். இதில் சென்னை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் தேரணிராஜன், துணை முதல்வர் டாக்டர் கவிதா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பவானி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 196 மாணவ-மாணவிகள் முதலாம் ஆண்டு வகுப்பில் நேற்று பங்கேற்றனர். முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளை, கல்லூரியின் மூத்த மாணவர்கள் வரவேற்றதோடு, ரோஜாப்பூவையும் பரிசாக அளித்தனர். இதேபோல், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவ-மாணவிகள் முதலாம் ஆண்டு வகுப்புக்கு வந்திருந்தனர். அவர்களை மூத்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கி இருக்கின்றன.
முதல்நாள் வகுப்புகள் குறித்து மாணவர்கள் கூறுகையில்:- மாணவன் புகழேந்தி, பெரம்பலூர்: எனது அப்பா கொத்தனாராகவும் அம்மா ஆடு மேய்ப்பவராகவும் உள்ளார். இரவில் கை, கால் வலியுடன் தூங்குவார்கள், அதற்கு மருந்து வாங்க கூட முடியாது. அப்போதுதான் என் அம்மா கூறுவார், நமது வீட்டிலும் ஒரு மருத்துவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று. இது என் பெற்றோரின் கனவு, அதை நான் நிறைவேற்றிவிட்டேன் என நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களாலும் மருத்துவ கனவை நினைவாக்க முடியும்.
எனது தாவரவியல் ஆசிரியரும், ஒரு பவுன்டேசனும் தான் எனக்கான கல்லூரி கட்டணத்தை கட்டியுள்ளனர். மாணவி – கீர்த்தனா, ஆத்தூர் நான் 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்விதான் பயின்றேன். நீட் தேர்வுக்கு தயாராகும்போது கொஞ்சம் கடினமாக தெரிந்தது. நீட் கோச்சிங் தனியார் மையத்தில் கற்க செல்லும்போது அது குறைவான பணமாக இருந்தாலும், எனக்கு அது அதிகமாக இருந்தது. அம்மா மற்றும் அவரின் நண்பர்கள் தான் கட்டணத்தை கட்டினார்கள். நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். காசுக்காக மருத்துவ தொழிலை செய்யாமல் மக்களுக்காக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன்.
மாணவி- அன்னப்பூரணி: என் அப்பா கொத்தனாராக இருக்கிறார். அவரின் மகள் நான் டாக்டர். டாக்டரோட அப்பா என மற்றவர் கூறும்போது என் பெற்றோர்களுக்கு பெருமையாக இருக்கும். என் பெற்றோரின் சந்தோசத்தை பார்க்கும்போது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.