Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டுக்கான நிதி உரிமைகளை பெறுவதற்கு மென்மையாக அல்ல கடுமையாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்: எம்.பிக்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, சென்னை மாவட்ட எம்பிக்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கலாநிதி வீராசாமி உள்பட அனைத்து திமுக எம்பிக்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் பாஜ கவனமாக இருக்கும். அதற்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். தீர்மானத்தில் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றியும், உங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேச வேண்டும். நாம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, தமிழ்நாட்டிற்கான தேவைகள் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான். எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் எம்பிக்கள் பேச்சு அமைய வேண்டும். ஒன்றிய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசி, புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். இந்தக் குரலை மென்மையாக ஒலிப்பதற்கு பதிலாக கடுமையாக சுட்டிக் காட்டி பேச வேண்டும். தமிழகத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமானது. இதற்கு எம்பிக்கள் முழுமையான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும். எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளைவிட திமுகவில் முக்கியமான பதவி என்றால், அது மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புதான். எனவே, அவர்களுக்கு உரிய மரியாதையை எம்பிக்கள் தர வேண்டும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதிப் பார்வையாளர்கள் நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். ஒரு தொகுதியைக்கூட இழக்கக் கூடாது என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். மாநில உரிமைகளுக்காக - தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளுக்காக - தொகுதி மக்களின் தேவைகளுக்காக, நாடாளுமன்றப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

* ஜிஎஸ்டி சட்டத்தால் மாநிலத்திற்கு ஏற்படும் இழப்பீட்டை நிறுத்திவிட்டதால் தமிழ்நாட்டிற்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய தேசியக் கல்விக் கொள்கையின் முரண்பாடான கருத்துருக்களை எதிர்ப்பதால் ‘சமக்ர சிக்ஷா’ திட்ட நிதியைத் தமிழ்நாட்டிற்கு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது ஒன்றியஅரசு. ரயில்வே திட்டங்களிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ கடன் பெறும் உரிமையை ஒன்றிய பாஜ அரசு நிராகரித்து வருகிறது. இதனால் மாநில நிதி நிலைமைக்குப் பெருத்த நெருக்கடி உருவா்கி இருக்கிறது. பாஜ அரசின் அநீதியான செயல்பாடுகள் பற்றி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

* சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் வக்ப் வாரிய திருத்தச்சட்டம், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல், மாநிலங்களுக்கான அதிகாரங்களை அபகரிப்பது, அவசர கதியில் கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்கள், நிதி ஒதுக்கீட்டில் பா.ஜ. அல்லாத மாநில அரசுகளிடம் காட்டும் பாராமுகம், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி குறைப்பு, 9.2 விழுக்காட்டிற்கு மேலான வேலை வாய்ப்பின்மை, இட ஒதுக்கீட்டு உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையிலான சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற ஒன்றிய பாஜ அரசின் அரசியல் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராக திமுகவின் உயர்நிலைச் செயல்திட்டக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிரொலிப்போம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.