சென்னை: தமிழகத்திற்கு ஒதுக்கிய ரயில்வே நிதியை திருப்பி அனுப்பியது குறித்து, தெற்கு ரயில்வே மழுப்பல் பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் 6,626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மட்டும் ரூ.617 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் நடக்கும் 10 ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை மட்டும் பல்வேறு காரணங்களை முன்வைத்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் திருப்பி அனுப்பி உள்ளார்.
குறிப்பாக, திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை; அத்திப்பட்டு – புதூர், ஈரோடு – பழனி; சென்னை – புதுச்சேரி – கடலூர்; காட்பாடி – விழுப்புரம்; ராமேஸ்வரம் – தனுஷ்கோடி; ஈரோடு – கரூர் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒதுக்கிய ரூ.600 கோடியை ‘சரண்டர்’ செய்வதாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், நிதியை அடுத்த காலாண்டுகளுக்கு மாற்றுவது தொடர்பான தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. தெற்கு ரயில்வேயில் நிதிப் பற்றாக்குறை இல்லை. தேவைக்கேற்ப திட்டங்களுக்கு நிதி கிடைக்கிறது. காலாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுகிறது. தமிழ்நாடு, கேளராவிற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகவே பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.