சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்வது என எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக மும்பை, சென்னை, கேரளா, குஜராத் மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. மே மாதத்தில் இதுவரை மும்பையில் 106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியானாவின் குர்கான் மற்றும் பரிதாபாத்தில் மூன்று கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பரிதாபாத்தில் பல்லா பகுதியில் உள்ள சேத்பூரில் வசிக்கும் 28 வயதுடைய பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்தவருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புனேயில் பொது மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்றாலும், மருத்துவமனையில் நகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே 50 படுக்கைகளை ஒதுக்கியுள்ளனர். இந்த வரிசையில் புதுச்சேரியில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 66 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று ஒன்பது மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாகவும், இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கொரோனா பரவல் உள்ளது. இதனால் பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சில சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது முற்றிலும் தவறான தகவல். இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே பொது சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோவில் உள்ள செய்தி மட்டுமே உண்மையானது. இந்த கொரோனா குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தேவைப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* கொரோனா பரவுவதாகவும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
* இது முற்றிலும் தவறான தகவல்.
* தமிழ்நாடு அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
* கொரோனா குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.