Wednesday, April 17, 2024
Home » தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கிறது: பிரதமர் மோடி 4ம் தேதி சென்னையில் பிரசாரம்

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கிறது: பிரதமர் மோடி 4ம் தேதி சென்னையில் பிரசாரம்

by Mahaprabhu

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வரும் 4ம் தேதி சென்னையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்று அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இப்பணிகள் முடிந்ததும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தேர்தல் நெருங்கும் நிலையில், தேசிய தலைவர்களும் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி வருகிற 27ம் தேதி பல்லடத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

அன்றைய தினம் மாலை மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். அன்று மதுரையில் தங்கும் மோடி முக்கிய தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு வியூகங்கள் வகுக்கப்படும் என்று தெரிகிறது. மறுநாள் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று மாலையில் திருநெல்வேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக பிரதமர் மோடி மீண்டும் அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மார்ச் 4ம் தேதி (திங்கட்கிழமை) அவர் சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதே நேரத்தில் அன்றைய தினம் சென்னையில் மாபெரும் பிரசார கூட்டத்தை நடத்த தமிழக பாஜவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடல் மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களை பார்த்துள்ளனர். இதில் ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த பாஜவினர் திட்டமிட்டுள்ளனர். அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையே, சென்னை கிண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று மாலை காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக வரும் 26ம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.

You may also like

Leave a Comment

14 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi