சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாள் மருத்துவ முகாமை சென்னை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: குடற்புழு நீக்க மாத்திரைகள் முதன்முறையாக 2010ம் ஆண்டு ஜூலை திங்கள் 21ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. 2015க்கு பிறகு இந்தியா முழுமைக்கும் அது விரிவடைந்து தற்போது இந்தியா முழுவதும் 6 மாதத்திற்கு ஒருமுறை குடற்புழு மாத்திரை எடுத்துக் கொள்ளுதல் என்ற வகையில் இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கிறது.
இந்த திட்டத்தை இன்றைக்கு 2 கோடியே 15 லட்சம் குழந்தைகளும், 54 லட்சத்து 67 ஆயிரம் இளம்பெண்களும் என ஒட்டுமொத்தமாக 2 கோடியே 70 லட்சம் பயனாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. பெருநகர் திறந்தவெளியில் மலம் கழிப்பது என்பது இப்பொழுது 100 சதவீதம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கே போதுமான அளவுக்கான விழிப்புணர்வு, வீட்டுக்கு ஒரு கழிவறை என்கின்ற திட்டமும் பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 8 கிலோமீட்டர் நடைபயணம் என்பது அன்றாட மனித வாழ்க்கையில் அதிக அளவில் பயன் அளிக்கக் கூடிய ஒன்று.
அதன் காரணமாகவே சென்னை அடையாறு, பெசன்ட் நகர் பகுதியில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலமாக அவை தொடங்கி வைக்கப்பட்டு தமிழகத்தில் 36 மாவட்டங்களில் அவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் நடக்கக்கூடிய பொருட்காட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் அரங்கம் அமைத்து தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான காட்சிகள் படுத்தப்பட்டிருந்தது. இதில் கடந்த 6 வருடங்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை மட்டுமே முதல் பரிசை பெற்று வருகிறது. மேலும், தற்போது குரங்கம்மை பாதிப்புகளோடு வருகிறார்களா என்பதை கண்காணிக்கும் பணியை தொடங்கி இருக்கிறோம். சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் படுக்கைகளுடன் கூடிய ஒரு சிறப்பு வார்டு ஒன்றையும் திறந்து வைத்திருக்கிறோம்.