திருச்சி: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பள்ளிகளில் மாஸ்க் அணிய உத்தரவிடப்படும் என்று அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைபள்ளிக்கு ரூ.18.41 கோடி செலவில் பிரம்மாண்டமாக பல்வேறு வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி நிர்வாக துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. முதலமைச்சர் அனைத்து துறை அமைச்சர்கள், அதிகாரிகளையும் அழைத்து இதுகுறித்து பேசி உள்ளார். ஜூன் 12ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்த பின்பு, கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது. மொழி குறித்து கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை. தமிழ் மொழியில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் வந்தது. அதனால் அவர் பேசியது சரிதான். திமுக அரசு மீது எந்த குறையும் கூற முடியாததால், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின்பும் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது குறை கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் அந்த அளவிற்கு வீரியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்’ என்றார்.