சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 14 பேர் குணமடைந்துள்ளனர். பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் உகான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியது. இதையடுத்து, அந்த நாட்டில் அதிகமான மக்களுக்கு தொற்று ஏற்பட்டு அதிகளவில் பொதுமக்கள் உயிரிழந்தனர். இது அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
முதல் அலை, இரண்டாம் அலை என அடுத்தடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவியது. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, 2 டோஸ்கள் செலுத்தப்பட்டன. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுக்குள் இருந்தது.
இந்த நிலையில், தற்போது ஆசியாவில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதில், சீனா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 42 பேர் குணமடைந்துள்ளனர் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 18 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர், அதில் 14 பேர் குணமடைந்துள்ளனர். இது தவிர புதுச்சேரியில் 13 பேரும், கேரளாவில் 15 பேருக்கு, கர்நாடகாவில் 4 பேரும், மகாராஷ்டிராவில் 7 பேரும், டெல்லியில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர்ந்து பரிசோதனை செய்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் வீரியம் இல்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளது.