சென்னை: உலக சுகாதாரத் தரவுப்படி கடந்த ஆண்டு 6 மில்லியன் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7300 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் டெங்கு பாதிப்பு ஒவ்வொரு 4-5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதிகபட்சமாக கடந்த 2017ம் ஆண்டு 1,88,000 பேர் பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்று காலமான 2019ம் ஆண்டில் 1,57,315 ஆக டெங்கு பாதிப்பு குறைந்துள்ளன.
இதற்கு கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபயாட்டிக் மனிதர்களிடையே ஏற்படுத்திய தாக்கம் காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா நோய் பரவல் காலத்தில் (2020 முதல் 2022ம் ஆண்டு) டெங்கு பரவல் குறைவாக இருந்தது. அதற்காக காரணத்தை கண்டறிவதற்காக தமிழக பொது சுகாதாரத்துறை ஆன்டிபாடி அளவை ஒப்பிட்டு செரோசர்வே மேற்கொண்டது. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
186 டெங்கு பரவல் பகுதிகள், 13,464 குளங்கள் உட்பட மொத்தம் 5,577 நபர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விரிவான ஆய்வக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் கொரோனா நோய் பரவல் காலகட்டத்தில் கொரோனா எதிரான ஆன்டிபாடி அளவு அதிகமாக (87.3%) இருந்தது கணக்கிடப்பட்டது. அதே காலகட்டத்தில் டெங்கு பாதிப்பும் குறைந்ததற்கு இத்தகைய ஆன்டிபயாட்டிகள் உடலில் உருவாகியிருந்தது காரணமாக இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
எல் நினோ சுழற்சி, நகரமயமாக்கல் ஆகிய காரணத்தால் வைரஸ் பரவுதல் அதிகமாக உள்ளது. குறிப்பாக புற நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா முழுவதும் பூச்சியியல் ஆய்வுகள், இயல்புநிலையாக, வெக்டார் அடர்த்தி, கொசு இடப் பரவல் மற்றும் டெங்கு பரவலைக் கண்டறியும் கண்காணிப்பு திட்டங்களின் தேவை அதிகமாக உள்ளது. கொசுவால் ஏற்படக்கூடிய டெங்கு பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து வந்த பகுதிகளில் கொசு முழு பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.