சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் 5வது ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளில் யாரும் இப்பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை. ஆனால் அவரது கால கட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினர். மேலும், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டப் பேரவை தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றை தனது தலைமையில் சந்தித்து, கூட்டணியில் ஒதுக்கி இருந்த பெரும்பாலான இடங்களில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும் காங்கிரசார் மத்தியில் பெரிய அளவில் கோஷ்டி பூசல்களும் எழவில்லை. இதனால் அகில இந்திய காங்கிரஸ் தலைமையானது, கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் கூட அவரை மாற்றும் விவகாரத்தில் தயக்கம் காட்டி வருகிறது. இருப்பினும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் தலைவர் பதவி கேட்டு டெல்லி தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
புதிய தலைவரை நியமித்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அகில இந்திய தலைமையிடம் தொடர்ந்து காய் நகர்த்தி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்று காங்கிரசார் மத்தியில் பெரிய அளவில் விவாதப் பொருளாகி வருகிறது. இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தயாராகவும், மாநிலம் முழுவதும் கட்சியை தயார்படுத்தவும், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவும் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய பாஜ ஆட்சியை வீழ்த்தும் வகையில் அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பெரிய அளவில் வலுவான கூட்டணியை அமைத்துள்ளன. இதனால் காங்கிரஸ் தலைமை ஒவ்வொரு மாநிலத்திலும் வலுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் கிராம, பூத் வாரியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எடுத்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்ற தகவல் வெளியாகி காங்கிரசார் மத்தியில் பரபரப்பை உருவாக்கியது. நேற்று இரவுக்குள் அறிவிப்பு வெளியாகும் என்ற தகவலால் மீண்டும் காங்கிரசார் மத்தியில் பரபரப்பு எழுந்தது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் நேற்று இல்லை. இதனால் தலைவர் மாற்றம் என்பது உண்டா? இல்லையா? என்ற கேள்வி காங்கிரசார் மத்தியில் தொடர்ந்து எழுந்து வருகிறது. இன்று அறிவிப்பு வெளியாகும், நாளை வெளியாகும் என ஒவ்வொரு நாளும் தகவல் பரவி கடந்த ஒரு மாதங்களாக காங்கிரஸ் தொண்டர்களை கடுப்பேற்றி வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் கட்சி தலைமை ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என்றும், ஒன்று மாற்றத்தை அறிவிப்பது அல்லது இருக்கிற தலைவரே பதவியில் நீடிப்பார் என்று அறிப்பது. இந்த இரண்டில் ஒன்றை அறிவித்தால் மட்டுமே தமிழ்நாடு காங்கிரசார் தங்கள் பணிகளில் வேகம் காட்டுவார்கள் என்றும், இல்லாவிட்டால் இதே பஞ்சாயத்தை டெல்லி வரை கொண்டு செல்வதே அவர்களுக்கு வாடிக்கையாக அமைந்துவிடும் என்றும் மூத்த காங்கிரசார் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஒன்று மாற்றம் அல்லது நீட்டிப்பு என்பதாகும். இரண்டில் எந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை காங்கிரஸ் தலைமை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. துளி அளவு கூட கசியவிடாமல் பார்த்து ெகாண்டதால் தான் தமிழ்நாடு காங்கிரசில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. எனவே அதை உடனடியாக அறிவித்து விட வேண்டும் என்பதே காங்கிரசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாளை டெல்லி செல்கிறார். அங்கு மூத்த தலைவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து வருகின்றனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் எம்பியுமான விஸ்வநாதன் டெல்லியில் இன்று காலை மல்லிகார்ஜூன கார்கேவை நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
அப்போது, தமிழ்நாட்டு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சி நிலவரம், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து விவாதித்துள்ளனர். பின்னர், வெளியில் வந்த விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமைக்கு புதிய மாற்றம் உள்ளதா? இல்லையா? என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அதற்கு முன்னதாகவே எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு பெரும்பான்மை அடிப்படையில் தலைவரை தேர்வு செய்ய வேண்டும். இதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும்பட்சத்தில் அவர்கள் மீது குண்டாஸ், கிரிமினல் உள்ளிட்ட குற்ற வழக்குளில் சிக்கி இருக்க கூடாது என மல்லிகார்ஜூன கார்கேவிடம் கோரிக்கை வைத்தேன். தமிழகத்தில் காங்கிரசை பொறுத்தவரை, அகில இந்திய காங்கிரஸ் தலைமை சீரமைக்க வேண்டும். அகில இந்திய தலைமை தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை விரும்புகிறது. புதிய அறிவிப்பு அடுத்த ஒரு சில தினங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.