சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 2024-ல் நடைபெறவுள்ளதால் இணையதள முன்பதிவு (online registration) செய்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை“ விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான இணையதள முன்பதிவு (online registration) 04.08.2024 முதல் <https://sdat.tn.gov.in> என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.08.2024. மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 10 முதல் துவங்கப்படவுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப் பிரிவு மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய அனைத்து பிரிவினரும் உடனடியாக இணையதளத்தில் முன்பதிவினை விரைந்து செய்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணாக்கர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். “ஆடுகளம்” தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.