புதுடெல்லி இந்தியா முழுவதும் உள்ள 11 ஆறுகளில் அதிக வெள்ளம் இருப்பதாக ஒன்றிய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் அசாம், பீகார், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் 11 ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் ஓடுவதாக ஒன்றிய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆறுகளில் நீர்மட்டம் எச்சரிக்கை அளவைத் தாண்டிவிட்டது. ஆனால் அபாய அளவை விடக் குறைவாகவே உள்ளதாக தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் கரிம்கஞ்சில் உள்ள குஷியாரா நதியும், ஜோர்ஹாட்டில் உள்ள நியாமிகாட்டில் உள்ள பிரம்மபுத்திரா நதியும் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளன. அதே போல் பீகார் மாநிலம் பால்தாராவில் கோசி, பெனிபாத்தில் பாக்மதி மற்றும் துமாரியாகாட்டில் கண்டக் ஆகிய இடங்களில் ஓடும் ஆறுகளிலும் வெள்ளம் அதிகரித்துள்ளது.
உபி மாநிலம் பதேகர் மற்றும் கச்லா பாலத்தில் கங்கா, எல்கின்பிரிட்ஜில் காக்ரா, மற்றும் கட்டாவில் கந்தக் ஆகிய இடங்களிலும், ஒடிசா மாநிலம் பாலேஷ்வர் மாவட்டத்தில் உள்ள சுபர்ணரேகாவின் மதானி சாலைப் பாலம் மற்றும் ராஜ்காட் ஆகிய இடங்களிலும், தமிழ்நாட்டில், காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள முசிறியிலும் வெள்ளம் எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆந்திரா, ஜார்க்கண்ட், கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 23 நீர்த்தேக்கம் மற்றும் தடுப்பணைகளின் நீர்வரத்து குறித்தும் ஒன்றிய நீர்வள ஆணையம் முன்னறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.