சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: நீண்ட நெடும் காலமாக சமூக நல்லிணக்கம் நீடித்து வரும் தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக ஆளுநர் ரவி கூறியிருப்பது கண்டனத்திற்குரியதாகும். ஆளுநர், பாஜவுக்கு வாக்கு சேகரிக்கும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார். தற்போது நந்தனார் பிறந்த மண்ணான கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மா.ஆதனூரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்திருக்கிறார்.
தலித் மக்கள் பூணூல் அணிவதன் மூலம் அவர்களையும் மேட்டுக்குடி மக்களாக மாற்றிவிட்டதாக எண்ணுகிறாரா ஆளுநர்? பூணூல் அணிந்தால் மேட்டுக்குடியாகி விடுவார்கள் என்பது மக்களை ஏமாற்றும் முயற்சி மட்டுமல்ல, மீண்டும் சனாதனத்தை மறைமுகமாக இந்த மண்ணில் ஊன்றும் முயற்சியாகும். ஆளுநர் செய்ய வேண்டிய ஆயிரம் வேலைகள் காத்திருக்கிறது. அடித்தட்டு மக்களுக்கான திட்டங்கள் குறிப்பாக, மாணவர்களின் எதிர்கால திட்டங்களுக்கான மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் தூங்கிக் கிடக்கிறது. அவற்றை எடுத்து பார்க்க ஆளுநருக்கு நேரமில்லை. அதைவிடுத்து சனாதனத்தை பரப்புவதிலும் பாஜவுக்கு வாக்கு சேகரிப்பிலும் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார். அவருக்கு அதில் ஆர்வம் இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சனாதனத்தை கையில் எடுத்து, பாரதிய ஜனதாவுக்கு வேலை செய்யட்டும்.