சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டாவது முதன்முறையாக சுகாதாரத் துறையின் இதயமாக உள்ள அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த 10, 15 ஆண்டுகளில், முன்பு இருந்ததை விட, சுகாதாரக் கட்டமைப்பு பல மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.
ஆனால் இங்கு அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டும், 13 ஆண்டுகளுக்கு பின் தங்கியும், நாட்டிலேயே மிகக் குறைவாகவும் உள்ளது. தமிழக சுகாதாரத் துறையில் எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இருப்பினும் இங்கு போதிய அளவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரமும், ஊதியமும் தரப்பட வேண்டும் என்ற இந்த இரண்டு விசயங்களை புறக்கணித்து விட்டு சுகாதாரத் துறையை வலுப்படுத்த முடியாது என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும்.
எனவே தமிழக முதல்வர் இந்த பட்ஜெட்டில் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிடவேண்டுகிறோம். இதன் மூலம் அரசு மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக பணி செய்ய வழி வகுப்பதோடு, கலைஞருக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.