சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது. மேலும் பாஜககவுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடுதான் என அதிமுக அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்வர்ராஜா கூறியதாவது : தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருக்காலும் நடக்காது. பாஜககவுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடுதான். கொள்கையின் அடிப்படையில் கூட்டணி அமைக்கவில்லை. வெற்றியின் அடிப்படையில் கூட்டணி உருவாகும். மேலும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு கிடைக்காது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
மேலும் கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் என்றகை்கும் விரும்ப மாட்டார்கள். முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் பாஜகவின் திட்டம் எதுவும் பலிக்காது. எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்திதான் தேர்தலில் அதிமுக போட்டி இட உள்ளது. கூட்டணி ஆட்சி என்று பாஜக நிர்பந்தித்தால் அதற்கு அதிமுக பணியாது. அதிமுகவை யாராலும் அபகரிக்கவோ வீழ்த்தவோ முடியாது. தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி பழனிசாமியின் தலைமையை பாஜக ஏற்கவில்லை என்றால் இரு கட்சிகளிடையிலான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை. பாஜவுடன் இணக்கமாக உள்ளதால் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டுக்கான நிதியை தர மறுக்கும் ஒன்றிய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.