தூத்துக்குடி: தமிழ்நாட்டில் பாஜ கூட்டணியில் பாமக இல்லை எனறு அக்கட்சியின் தலைவர் அன்புமணி திட்டவட்டமாகத் தெரிவித்தார். பாமக தலைவர் அன்புமணி தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: நெய்வேலியில் விவசாயிகளுக்கு ஆதரவாகவே போராட்டம் நடத்தினோம். அழிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கினால் எல்லாம் சரியாகிவிடுமா? என்எல்சி விரிவாக்க திட்டத்தை கைவிடவில்லை என்றால் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். இன்று தக்காளி ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. என்எல்சி போன்ற நிறுவனங்களுக்காக விளைநிலங்களை அழித்தால், சில ஆண்டுகளில் அரிசி 500 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி வரும். பாஜ தலைவர் அண்ணாமலை சொல்வது வேடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டின் மின் உற்பத்தி 36 ஆயிரம் மெகாவாட், மொத்த தேவை 18 ஆயிரம் மெகாவாட், இதில், என்எல்சி பங்கு 800 மெகாவாட், சமீபத்தில் 400 மெகாவாட் தான் அளிக்கிறது.
800 மெகாவாட் மின்சாரத்திற்காக 50 ஆயிரம் விளைநிலங்களை ஏன் அழிக்கிறீர்கள். என்எல்சியில் தமிழர்களுக்கு கூலி வேலைகள்தான் கொடுக்கப்படுகிறது. பல ஏக்கரில் வீடு கட்டி குடியிருக்கும் அதிகாரிகளுக்கு எடுபிடி வேலை செய்வதுதான் தமிழர்களுக்கு கொடுக்கப்படும் வேலை. இந்த வேலையைஅண்ணாமலை சொல்கிறாரா? அன்னூரில் கையகப்படுத்தியது தரிசு நிலம், அப்படிப்பட்ட நிலத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து அண்ணாமலை போராடினார். ஆனால், இங்கு முப்போகம் விளையும் 50 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துகிறார்கள். அன்னூருக்கு ஒரு நியாயம், கடலூருக்கு ஒரு நியாயமா? டெல்லியில் பாஜ கூட்டணியில் பாமக உள்ளபோதும் தமிழ்நாட்டில் பாஜவின் கூட்டணியில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.