சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று மதியம், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து மதுரை சென்றார். முன்னதாக, அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ மாநிலத்துக்கு மாநிலம், மதவாத அரசியலை மாற்றி கையில் எடுக்கும். வட இந்தியாவில் விநாயகர், ராமர் என்றும், மேற்குவங்க மாநிலத்தில் துர்கா, காளி என்றும் வேறு வடிவமும், தமிழ்நாட்டில் முருகனை கையில் எடுக்கின்றனர். இது பாஜவின் அரசியல் உத்திகளில் ஒன்று. பிற மாநிலங்களில் மதவாத அரசியலுக்கு மயங்குவது போல், தமிழ்நாட்டில் பாஜவின் மதவாத அரசியலுக்கு மக்கள் மயங்க மாட்டார்கள். முருகனும் மயங்க மாட்டார். சங்கிகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை வர இருக்கிற 2026 தேர்தலில் முருகன் உறுதிப்படுத்துவார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்பு, நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்வதற்கான குழுக்கள் அமைக்கப்படும். அதில் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற ஒரு கருத்து வலுவாக உள்ளது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஒரு கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார். தென்னிந்திய மாநிலங்கள் குறிப்பாக, தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்பதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளார். முதல்வரின் இந்த கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது.மாநில அரசுகளை கலந்து பேசாமல் தொகுதிகள் மறுவரையறை குறித்து, முடிவு் எடுக்கக் கூடாது.