* ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவன உயர் அலுவலர்களுடனும் சந்திப்பு
சென்னை,: அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசியதுடன், கூகுள் நிறுவனத்துடன் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27ம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தார்.
அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதல்வர் முன்னிலையில் கடந்த 29ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், கையடக்க கணினி மற்றும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள், ஹெட்போன் போன்ற அணியக்கூடிய மின்னணு பொருட்கள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, தயாரித்து சந்தைப்படுத்துவது மற்றும் பல்வேறு தொடர்புடைய சேவைகளை செய்து வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் கலிபோர்னியாவின் குபெர்டினோவில் அமைந்துள்ளது. 27 நாடுகளில் 530 உலகளாவிய விற்பனை நிலையங்களுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், ஹான் ஹய் (பாக்ஸ்கான்), பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு முதல்வர் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து பேசியபோது, உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழகத்திற்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும், மாநிலத்தின் உற்பத்தி சூழலை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளை கோடிட்டு காட்டியதோடு, தமிழ்நாட்டில் திறன் வளர்ச்சி மிகுந்த இளைஞர்கள், பெண் கல்வி மற்றும் அவர்களின் திறன் வளர்ச்சி குறித்தும், தொழில்துறை, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து தளவாட வசதிகள் போன்றவற்றில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.
எதிர்காலத்தில் இதனை மேலும் வலுப்படுத்தி, ஆசியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை உருவாக்க இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அத்துடன், இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த மாநிலமாக அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் விளங்கும் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார். கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, ஆன்லைன் விளம்பரம், தேடுபொறி தொழில்நுட்பம், கிளவுட் கம்ப்யூட்டிங், கணினி மென்பொருள், குவாண்டம் கம்ப்யூட்டிங், இ-காமர்ஸ் மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவனமாகும். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் அமெரிக்க பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கூகுள் நிறுவனத்தின் தலைமையகம் கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் சந்தித்த போது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்திற்கான திறன் ஆகியவற்றில் ஏஐ கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார். இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன ஏஐ- திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து அழைப்பு விடுத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லின்க்டின் முதன்மை செயல் அலுவலர் யான் ரோஸ்லான்ஸ்கி மற்றும் உயர் அலுவலர்களை சந்தித்து, டேட்டா சென்டர் விரிவாக்கம், ஜிசிசி மற்றும் கிமி திறன் முயற்சிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பேசினார். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
* ‘வியப்பூட்டும் அனுபவம்’
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் அலுவலகங்களுக்கு சென்று பார்வையிட்டது வியப்பூட்டும் அனுபவமாக அமைந்தது. பல்வேறு வாய்ப்புகள் மற்றும் கூட்டாண்மைகள் பற்றி கலந்துரையாடினோம். இந்த கூட்டாண்மைகளை வலுப்படுத்தி, ஆசியாவின் முதன்மையான வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்த உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.