* தானே முன்வந்து திருமணம் செய்யும் குழந்தைகளால் போக்சோ எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் சேவை இல்லங்களில் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அருகே சானடோரியம் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக வெளி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் சேவை இல்லத்தில் தங்கி மகளிர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி பள்ளி ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் அரசு சேவை இல்லத்தில் தங்கியுள்ள மாணவி காலை எழுந்து தூக்க கலக்கத்தில் வெளியே வந்துள்ளார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் முகத்தில் துணிமூடிக்கொண்டு வந்து மாணவியை வலு கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மாணவி அலறியபோது, அவரை மர்ம நபர் தாக்கியுள்ளார். இதில் மாணவி பலத்த காயமடைந்துள்ளார். மாணவி தொடர்ந்து கூச்சலிடவே மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தொடர்ந்து மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த மாணவிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் 37 வயதான காவலாளி மாத்யூ தான் இந்த சம்பவத்தை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சேப்பாக்கத்தில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை ஆணையரகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது: சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சேவை இல்லத்தில் உதவி தேவைப்படும் குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். சேவை இல்லத்தில் 13 வயது குழந்தையை காவலாளி பாலியல் சீண்டல் செய்ய முயற்சித்துள்ளார். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளார். சம்பவம் நடைபெற்ற இல்லத்தில் 8 சிசிடிவி கேமராக்கள் உள்ளது. வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் இந்த குற்றச் சம்பவம் நடந்துள்ளது. மாணவி தைரியமாக அடையாளம் காட்டியதால் காவலாளி உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதுவரை இந்த மாதிரியான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. சேவை இல்லத்தில் உள்ள 129 குழந்தைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு புகாரும் வேறு எந்த பெண்களிடமிருந்தும் வரவில்லை. 21 வயதில் இருந்து அந்த நபர் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு வரை அவர் மீது எந்த புகாரும் வரப்படவில்லை. இருப்பினும் 130 குழந்தைகள் உள்ள இல்லத்தில் உடனடியாக 3 பெண் காவலர்களை கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். பெண்களுக்கான அனைத்து சேவை இல்லங்களில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் தொண்டு நிறுவனங்களின் இல்லங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்களிலும் பெண் காவலர்கள் மட்டுமே நியமிக்கப்படும். வரும் காலங்களில் இதுபோன்ற எந்த சம்பவங்களும் நடைபெறாது. 1089 எண்ணில் புகார் அளிப்பதற்காக அழைப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அரசு சேவை இல்லங்களில் உள்ள பெண்கள் புகார் அளிக்க வேண்டும் என்றால் 1089 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். குழந்தைகள் திருமணம் அதிகரிப்பதற்கு தானே முன்வந்து திருமணம் செய்யும் குழந்தைகளின் திருமணம் காரணமாக உள்ளது. மேலும் இவை அனைத்தும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனவே போக்சோ சட்டத்தின் வழக்கு 48 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.