சென்னை: ‘‘தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது’’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சங்கராபுரம் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.இதற்கிடையே, பாளையங்கோட்டையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்நிலையில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், செப்டம்பர் 1ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. சென்னையில் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.