சென்னை: தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்று 5 பெண் எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல உள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு முறை அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நீண்ட காலத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இருந்தாலும் அவை இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இதற்கிடையே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 945 பேர் போட்டியிட்டதில் 77 பெண் வேட்பாளர்களும் களத்தில் குதித்தனர். இது 8 சதவீதம் ஆகும்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதில் தமிழ்நாட்டில் இருந்து 5 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி (திமுக), தென்சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக), தென்காசியில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் (திமுக), கரூரில் ஜோதிமணி (காங்கிரஸ்), மயிலாடுதுறையில் வக்கீல் சுதா (காங்கிரஸ்) ஆகிய 5 பேர் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள் ஆவர். இதில் திமுக 3, காங்கிரஸ் 2 வேட்பாளர்களும் ஆவர். தமிழகத்தில் இருந்து 34 ஆண் எம்பிக்களும், 5 பெண் எம்பிக்களும் நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளனர்.
தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி, தென்சென்னை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தோல்வி அடைந்து நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர்.