Friday, April 19, 2024
Home » தமிழ்நாடு 49 லட்சம் MSME நிறுவனங்களை கொண்டு தொழில் துறையில் இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய மாநிலமாக விளங்குகிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உரை

தமிழ்நாடு 49 லட்சம் MSME நிறுவனங்களை கொண்டு தொழில் துறையில் இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய மாநிலமாக விளங்குகிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உரை

by Kalaivani Saravanan

சென்னை: தமிழ்நாடு 49 லட்சம் MSME நிறுவனங்களை கொண்டு தொழில் துறையில் இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய மாநிலமாக விளங்கி வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் சார்பில் நடைபெறும் நிலையான கிளஸ்டர் மேம்பாடு -முழுமையான அணுகு முறை குறித்து விவாதிப்பதற்காக நடைபெறும் கருத்தரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர்;

இன்று நடைபெறும் நிலையான குழும வளர்ச்சி குறித்த கருத்தரங்கத்தை துவக்கி வைக்கும் வாய்ப்பை வழங்கிய அசோசெம் தமிழ்நாடு வளர்ச்சி கவுன்சிலிங் மாநிலத் தலைவர் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு முதலில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தங்களின் பங்களிப்பை அளிப்பதற்காக 1920-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்டமைப்பானது இன்று 400 சங்கங்கள் 4 லட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்களுடன் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

மிக பெருத்தமான காலக்கட்டத்தில் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தில் குழுமங்களுக்கு- Clusters தேவைப்படும் நிதி, தொழில் நுட்பம், அடிப்படை வசதிகள், வளர்ச்சிக்கான கொள்கைகள், வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல், வேளாண்மைக் குழுமங்கள் ஆகியவற்றை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. நீங்கள் கலந்துரையாட உள்ள கருத்துக்களில் கழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை எடுத்துரைக்க நல்ல ஒரு வாய்ப்பை வழங்கிய அசோசெம் தலைவருக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும் தொழிற்சாலைகளே ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்ற நிலை மாறி இன்று MSME தொழில்களே நாட்டின் பொருளாதாரத்திற்கும் தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் என்ற நிலை உருவாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, கிராமப்புர பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் MSME நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது.

தமிழ்நாடு, 49 லட்சம் MSME நிறுவனங்களை கொண்டுதொழில் துறையில் இந்தியாவிலேயே 3-வது மிகப் பெரிய மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 9.22 சதவீதம் ஜவுளியில் 19.4 சதவீதம் கார் ஏற்றுமதியில் 32.5 சதவீதம் தோல் ஏற்றுமதியில் 33 சதவீதம் இந்த சாதனைகளுக்கு எல்லாம் உறுதுணையாகவும் அடித்தளமாகவும் விளங்குவது MSME தொழில்கள் நிறுவனங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவின் ஏற்றுமதியில் 8.89 சதவீத பங்களிப்பை வழங்கும் தமிழ்நாடு ரூ. 1 லட்சத்து 93 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. குறிப்பாக ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் 58 சதவீதம், காலணி ஏற்றுமதியில் 45 சதவீதம், மின்னணு இயந்திரங்கள் மின்னணு சாதனங்களில் 25 சதவீதம் என பல்வேறு துறைகளில் தமிழ்நாடு தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.

இன்று இந்த கருத்தரங்கின் மைய பொருளாக விவாதிக்க உள்ள cluster – குழுமங்கள் குறித்து கடந்த நிதி நிலை அறிக்கையில் 20 குறுந்தொழில் குழுமங்கள் Micro Cluster அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டதற்கும் மேலாக ஒரு புதிய சாதனையாக, கடந்த ஒரே ஆண்டில் ரூ.113 கோடி அரசு மானியத்துடன் 25 குறுந்தொழில் குழுமங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டின் MSME தொழில் நிறுவனங்களின் தரத்தினை உலக அளவில் உயர்த்திடும் வகையில் பெருங்குழுமத் திட்டம் Mega Clusters அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் – திருமுடிவாக்கத்தில் ரூ.33 கோடியே 33 லட்சம் அரசு மானியத்துடன் ரூ. 47 கோடியே 62 லட்சம் திட்ட மதிப்பீட்டில், துல்லிய உற்பத்தி பெருங் குழுமமும், விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனத்தில் – ரூ. 71 கோடியே 56 லட்சம் அரசு மானியத்துடன் ரூ.155 கோடி திட்ட மதிப்பீட்டில், மருந்தியல் பெருங்குழுமமும் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது, பணிகள் நடைபெற்று வருகிறது.

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழிற்பேட்டை அமைக்க நகர்ப்புறங்களில் போதிய நிலம் இல்லாத காரணத்தினாலும், நிலத்திற்கான முதலீட்டினை குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கிண்டி- ரூ.90.13 கோடியில்-152 தொழில் கூடங்கள், அம்பத்தூர்-ரூ.60.55 கோடியில்-112 தொழில் கூடங்கள், சேலம்- ரூ.24.50 கோடியில் – 100 தொழில் கூடங்கள் என மொத்தம், ரூ. 175 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 364 தொழில் கூடங்கள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகங்கள், மாண்புமிகு முதல்வர் அவர்களால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு குறு, சிறு குழுமங்களுக்காக அறிவிக்கப்பட்ட 43 பொது வசதி மையங்களில் ஒன்றிய – மாநில அரசு மானியமான ரூ.391 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் 28 பொது வசதி மையங்கள் தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. பொது உற்பத்தி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ்திருப்பூர்- கவுண்டம் பாளையம் – அட்டை பெட்டி குழுமம், சேலம் – சிவதாபுரம் – வெள்ளி கொலுசு குழுமம், கோயமுத்தூர்- அப்பநாயக்கன்பட்டி புதூர்-ப்ளாஸ்டிக் மறுசுழற்சி குழுமம் ஆகிய குழுமங்களுக்கு ரூ.10 கோடியே 40 லட்சம் மப்பிட்டில்பொது உற்பத்தி மையங்கள் அமைத்துத் தரப்பட உள்ளது. ரூ.26 கோடியே 58 லட்சம் மப்பிட்டில் 6 திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

MSME தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்திட ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க, அனைத்து மாவட்ட தொழில் மையங்களிலும், மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மத்திய ரிசர்வ் வங்கி, பன்னாட்டு நிதி சேவை ஆணையம், இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்ட மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நாட்டிலுள்ள MSME நிறுவனங்கள் சொத்து பிணையில்லா வங்கி கடன் பெறுவதை எளிதாக்க இந்தியாவிலேயே முதல் முறையாக மாண்புமிகு முதல்வர் அவர்களால் ரூ. 100 கோடி நிதியில் “தமிழ்நாடு கடன் உத்திரவாத திட்டம்” துவக்கி வைக்கப்பட்டது. MSME நிறுவனங்களுக்கு 90% வரை வங்கி கடன் உத்திரவாதம் வழங்கி வரும் ஓரே மாநிலம் தமிழ்நாடு தான் இத்திட்டம் துவக்கப்பட்ட குறுகிய காலத்தில் 83 MSME நிறுவனங்களுக்கு ரூ.20 கோடியே 37 லட்சம் கடன் உத்திரவாதத்தை அரசு வழங்கி உள்ளது.

பெருந்தொழில் நிறுவனங்களுக்கு MSME நிறுவனங்கள் வழங்கிய பொருட்களுக்கான விலை பட்டியல்களை – வங்கிகளில் வைத்து விரைவாக கடன் பெற தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் – Tamil Nadu-TReDS எனும் புதுமையான திட்டம் முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இத்தளத்தின் மூலம் 142 MSME நிறுவனங்கள் ரூ. 353 கோடியே 83 லட்சம் வங்கி கடனை விரைவாக பெற்றுள்ளனர்.Tamil Nadu-TReDS தளத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இணைவதை கட்டாயமாக்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை தெரிவித்துக் கொண்டார் மேலும், இத்தளத்தில் இணைந்துள்ள 14 வங்கிகள் MSME நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 120 கோடி அளவிற்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளன.

MSME நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய பொருட்களுக்கான தொகையை அந்த நிறுவனங்கள் வழங்காத பட்சத்தில், அவற்றைச் சட்டப்பூர்வமாக பெற்றுத்தர சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 மண்டலங்களில் வசதியாக்கல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கழக அரசு பொறுப்பேற்ற பிறகு இம்மன்றங்கள் மூலம் 430 நிறுவனங்களுக்கான நிலுவை தொகை ரூ.84 கோடியே 62 லட்சம் பெற்று வழங்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர்கள் தொழில் உரிமங்கள் பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க Single Window Portal 2.ஓ தளம் முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இத்தளத்தின் மூலம், இதுவரை MSME நிறுவனங்களிடம் இருந்து 19 ஆயிரத்து 429 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 17 ஆயிரத்து 828 தொழில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஒரு சாதனையாக, கடந்த ஆண்டில் மட்டும் 9 ஆயிரத்து 603 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் ஸ்டாட்-அப்- நிறுவனங்களை உருவாக்க, புத்தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 லட்சம் ஆதார நிதி வழங்கும் -TANSEED திட்டத்தின் கீழ் இது நாள் வரை பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஸ்டாட் – அப் நிறுவனங்கள் உள்ளிட்ட 113 ஸ்டாட்-அப் நிறுவனங்களுக்கு ரூ.22 கோடியே 90 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கழக அரசு பொறுப்பேற்ற பின் ஸ்டாட்-ஆப் தர வரிசையில் இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு, 3-ஆம் நிலைக்கு முன்னேறி ‘‘லீடர்” தகுதியை பெற்றுள்ளது.

இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களை புதிய தொழில்முனைவோர்களாக உருவாக்கிட முதல்வர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 64 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு தொழில் முனைவோர் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்திடும் வகையில் புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 242 புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ரூ.6 கோடியே 40 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

சுய வேலைவாய்ப்பு திட்டங்களான NEEDS-UYEGP-PMEGP ஆகிய திட்டங்களுடன், கடந்த ஆண்டு MSME துறையின் கீழ்புதிதாக கொண்டுவரப்பட்ட உணவுப்பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான – PMFME ஆகிய 4 திட்டங்களின் கீழ் ரூ.656 கோடி 27 லட்சம் மானியத்துடன் ரூ.1,817 கோடி வங்கி கடனுதவி வழங்கி 22 ஆயிரத்து 425 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். உங்களை போன்ற பெரும் கூட்டமைப்புகள் அசோசெம், சிக்கி, பிக்கி போன்ற அமைப்புகள் நடத்தும் கருத்தரங்குகள் கூடி ஆலோசித்தோம், கலைந்தோம் என்று இல்லாமல், ஒன்று கூடி செயலாற்றிட வேண்டும்.

உதாரணமாக குறுங்குழுமங்கள், பெரும் குழுமங்கள் செயல்படுத்தப்படும் போது அமைக்கப்படும் எஸ்.பி.வி-கள், தாங்களின் பங்களிப்பு தொகையினை அளிப்பதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், மாநில – ஒன்றிய அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்தாலும், எஸ்.பி.வி-க்களின் பங்களிப்புத் தொகை வழங்காத நிலையில், திட்டத்தை தொடங்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, உங்களை போன்ற கூட்டமைப்பினர்- புதிய தொழில் முனைவோர்களுக்கும் குழுமமாக Cluster செயல்பட முன்வரும்- எஸ்.பி.விகளுக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கிட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,

இந்நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் TIIC மேலாண்மை இயக்குநர் திரு. ஹன்ஸ் ராஜ் வர்மா, இ.ஆ.ப., அசோசெம் தமிழ்நாடு கவுன்சிலின் மாநிலத் தலைவர், காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், கிராண்ட் தோர்டன் பாரத் பங்குதாரர் பேராசியர். பத்மானந்த், ஜி.டி பாரத் மேனேஜர் திரு. முகமத் சைதி, தொழில் முனைவேர்கள், தொழில் அதிபர்கள், அசோசெம் தமிழ்நாடு மாநில கவுன்சில் நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi