Sunday, September 15, 2024
Home » தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Karthik Yash

சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர் கூட்டம் என்பதால், நாற்பதுக்கு நாற்பது வெற்றியை ஈட்டித் தந்த, ஆற்றல்மிகு மாவட்டச் செயலாளர்களுக்கும்-தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகளையும்-வாழ்த்துகளையும் – மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்த நன்றியை உங்கள் மூலமாக திமுகவின் ஒவ்வொரு தொண்டரின் இதயத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி சாதாரண வெற்றி இல்லை; சாதாரணமாகவும் இது கிடைத்துவிடவில்லை. 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாற்பதுக்கு 39 பெற்றோம். 2024 தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது பெற்றோம். இரண்டு தேர்தலில் முழுமையான வெற்றியை இதுவரை யாரும் பெற்றது இல்லை; நாமும் இதுக்கு முன்பு பெற்றதும் இல்லை! இந்த வெற்றிக்கு உங்களது உழைப்பு, உங்களது செயல்பாடு மிக மிக அடிப்படையாக அமைந்திருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை ஆவணப்படுத்தி, ‘தென் திசையின் தீர்ப்பு’ என்ற நூலை உருவாக்கி வழங்கியிருக்கிறேன். அதை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டுள்ளார். பொதுச்செயலாளருக்கும், பொருளாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது உழைப்பையும் வெற்றியையும் பதிவு செய்யும் ஆவணங்கள் அதிகம் இல்லை. அதனால்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய எல்லா செயல்பாடுகளையும் இந்த நூலில் முழுமையாக தொகுத்து வழங்கி இருக்கிறேன். உங்கள் மாவட்டங்களில் இயங்கும் கழகம் சார்ந்த நூலகங்களிலும் பொது நூலகங்களிலும் இந்த புத்தகத்தை நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, நடந்த முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் வென்றிருக்கிறோம். சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் நம்முடைய திமுக ஆட்சி என்பதால் சந்தேகமில்லை. அதற்கு தயாராகும் வகையில், நாம் களப்பணிகளை தொடங்க வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும். விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் அதேவேளையில் நம்முடைய சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. அந்த அளவுக்கு நலத்திட்டப் பணிகளை செய்திருக்கிறோம். மக்களிடம் நற்பெயரை வாங்கியிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த வீட்டில் ஒருவராவது பயனடையும் வகையில்தான் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களை சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய களப்பணி மிக மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும். நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 27ம் தேதி இரவு அமெரிக்காவிற்குப் புறப்பட இருக்கிறேன். தீர்மானத்தில் சொன்னபடி, முப்பெரும் விழாவிற்கான பணிகளை செய்து முடிப்பதோடு நான் இப்போது சொல்லியிருக்கும் பணிகளையும் செய்ய தொடங்கியிருக்க வேண்டும். நான் அமெரிக்காவில் இருந்தாலும் தலைமைக் கழகம் மூலமாக இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருப்பேன்.

நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை அரசு சார்பிலும், திமுகவின் சார்பிலும் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோம். நாளை மறுநாள் தலைவர் கலைஞர் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட இருக்கிறது. உலகத்தில் எந்த தலைவருக்கும் இப்படி சிறப்புகள் செய்யப்பட்டது இல்லை என்ற அளவிற்கு கொண்டாடி இருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக, வரும் முப்பெரும் விழாவில் திமுகவின் பவள விழா நிறைவையும் தீர்மானத்தில் சொன்னபடி மிகச்சிறப்பாக நடைபெற வேண்டும். திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம்! அந்த வரலாற்றை எழுதியது நாம்தான்! கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆனபிறகும் ஆட்சியில் இருக்கும் இயக்கமும் நம்முடையதுதான். அப்படிப்பட்ட தருணத்தில் – கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் இந்த இயக்கத்தில், நானும் நீங்களும் பல்வேறு கட்சிப் பொறுப்புகளில் இருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் கிடைத்த மிகப்பெரிய பெருமை!
75 ஆண்டுகள் கடந்து விட்ட இந்த இயக்கத்தின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது.

ஆலமரமாக இந்த இயக்கம் வேரூன்றி நிற்கிறது என்றால், அதற்கு காரணம், இந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு, கோடிக்கணக்கானவர்களின் உழைப்பும் தியாகமும் உரமாக்கப்பட்டிருக்கிறது. அதன் பயனைத்தான் இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். அதேமாதிரி, இந்த இயக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் வரலாற்றுக் கடமையும் நம்முடைய கைகளில் இருக்கிறது. அதற்கான உழைப்பை வழங்க உங்களை நீங்கள் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

thirteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi