சென்னை : தமிழகத்தில் சமூக நலத்துறையில் இருந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென தனித்துறையை ஏன் உருவாக்க கூடாது? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் கடந்த 202 இல் பாலியல் தொல்லைக்கு உள்ளானார்.இதுதொடர்பாக அவர் கல்லூரி முதல்வரிடமும் மற்றும் காவல் துறையிடமும் புகார் அளித்தார்.ஆனால் அதன்மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக வேறொரு ஊழியர் மூலம் பொய் புகார் பெற்று, பாலியல் புகார் கூறிய பெண் மருத்துவ அதிகாரியையே, சஸ்பெண்ட் செய்தார் கல்லூரி முதல்வர்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவ அதிகாரி மனு தாக்கல் செய்தார். அதில், “பாலியல் புகார் அளித்த என் மீது தவறான குற்றச்சாட்டில் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்துள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் என்னை பணியில் அமர்த்தி, எனக்கான பணிக்கொடைகளை பெற்றுத்தர வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்து இடைநீக்கம் செய்ததில் முகாந்திரம் இல்லை என்று கூறி இடைநீக்க உத்தரவை ரத்து செய்தார் நீதிபதி.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தரப்பில், “பாலியல் புகார்கள் மீது சிறப்பு கவனத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் பணிபுரியும் அரசு, தனியார் நிறுவனங்களில் இதுவரை 36,000 உள்புகார்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது, “இவ்வாறு தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி,”தமிழ்நாட்டில் சமூக நலத்துறையில் இருந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கு தனித் துறையை உருவாக்க அரசுக்கு பரிந்துரை அளிக்கிறோம். அரசு துறைகளில் பணி நியமனம், பதவி உயர்வுக்கு, பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சியை கட்டாயமாக்க வேண்டும். அடிப்படை பணி முதல் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பாலியல் உணர்திறன் பயிற்சி அளிக்க வேண்டும். இது குறித்து அரசு துறை செயலாளர்களுடன் கலந்து பேசி அவற்றை செயல்படுத்த வேண்டும்,”இவ்வாறு தெரிவித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.