சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவ பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு உள்ளூர் கொள்முதல் மூலம் பாதியளவு மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிய வருகிறது. தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பலர் இருந்தும், 1.11.2023 முதல் மருத்துவ கல்வி இயக்குநர் பணியிடம் காலியாகவே இருப்பது, அரசு மருத்துவர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இரு நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர ஆணையாளர், அடிபட்ட தனது உதவியாளர் ராமன் என்பவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனையில் தனது உதவியாளருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் உடனடியாக தேவைப்படும் மருந்துகளை வழங்கிட வேண்டும், கிராம பகுதிகளிலும் அரசு கிளினிக்குகளை திறந்திட வேண்டும், இந்திய மருத்துவ கல்வி இயக்குநர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.