சென்னை: இன்று (19.6.2025) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் இராஜாதோட்டம் மற்றும் பி.ஆர்.என்.கார்டன் திட்டப்பகுதிகளின் கட்டுமான பணிகள், சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பெரியார் நகர் ,மற்றும் ஜவகர்நகரில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகம், மற்றும் நூலகத்தினை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்:
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலின்படி பல்வேறு திட்டபணிகளை குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டோம். இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இராஜா தோட்டம் திட்டப்பகுதியின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்படி இத்திட்டப்பகுதி கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்பணிகள் நிறைவடையவுள்ளது. வருகின்ற ஜூலை மாதம் 15 முதல் ஜூலை 20 – ம் தேதிக்குள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு அங்கு ஏற்கனவே குடியிருக்கும் குடியிருப்புதாரர்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இராஜாதோட்டம் திட்டப்பகுதியில் குடியிருப்புதாரர்களின் கோரிக்கையின் படி நியாயவிலை கடை, அங்கன்வாடி, திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு மைதானம் போன்றவையும் ஏற்படுத்தி தரப்படவுள்ளது. பெரியார் நகர், ஜவகர்நகர் பகுதியில் படைப்பகம் ஏற்படுத்தி தருவதற்காக ஏற்கனவே இருந்த நூலகம் அகற்றப்பட்டு புதிதாக படைப்பகம், நூலகம் கட்டித்தரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரியார்நகர் படைப்பகம் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் நிறைவு செய்து படிக்கின்ற மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
வடசென்னை பகுதியில் இராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திரு.வி.க நகர் எழும்பூர், வில்லிவாக்கம் போன்ற சட்டமன்ற தொகுதிகளில் 9 இடங்களில் படைப்பகம் நிறுவுவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டு, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அதையும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்ல தென் சென்னையிலும் இதுபோன்ற 6 படைப்பகங்கள் உருவாக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றது. இப்பணிகள் ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.
இந்த படைப்பகத்தின் நோக்கம் எல்லாருக்கும் எல்லாம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சித்தாந்தத்தின் படி தொடங்கப்பட்டது. எழை எளிய மாணவர்கள், வீட்டில் கணினி, அருகலை ( wifi) பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பிள்ளைகள் , அதிக புத்தகங்கள் விலைக்கு வாங்கி படிக்க முடியாத நிலையில் உள்ள பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் உருவாக்கப்பட்ட இத்திட்டம் 6 மாதத்திற்குள் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் (TNPSC) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
இது போன்ற படைப்பகம் அதிக அளவு ஏற்படுத்துவது மூலம் நிச்சயமாக தமிழகம் கல்வியில் ஒரு சிறந்த நிலை அடையும். கல்வி நிலைப் பெற்றால் பொருளாதாரம் நிலைபெறும். கல்வியும், பொருளாதாரம் நிலைபெற்றாலே வன்முறையற்ற ஒரு சமுதாயம் உருவாக்கப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் எல்லாருக்கும் எல்லாம் என்ற எண்ணங்களுக்கு வண்ணம் சேர்க்கும் வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முழுமுயற்சியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
இந்தஆய்வின் போது தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் (பொ) ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவஞானம் இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் பிரவின், திரு.வி.க மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் வி.எஸ்.கிருஷ்ணசாமி, வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) இளம்பரிதி, நிர்வாகப் பொறியாளர் ஜானி சாம்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்