சென்னை: வளர்ந்துவரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 15 மே 2023 அன்று துவங்கி வைக்கப்பட்ட புத்தாய்வு மையமான தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ITNT Hub), தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில், முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன், ஆராய்ச்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தில் அறிவு சார் பங்குதாரர் என்ற அடிப்படையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நீடித்ததன்மை கொண்ட வளர்ச்சிக்கு உதவும் மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.