சென்னை: தமிழ்நாட்டில் ரூ. 240.99 கோடி மதிப்பிலான மருந்துகள் கையிருப்பில் உள்ளது’’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது என்கின்ற வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதற்கு நான் அவரிடம் தட்டுப்பாடு எங்கு நிலவுகிறது என்று தெரிவித்தால், அதனை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்திருந்தேன். 2013ம் ஆண்டிற்கு பிறகு 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மொத்த விருதுகள் எண்ணிக்கை 549. ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு கிடைத்த விருதுகளின் எண்ணிக்கை 310 ஆகும். அதேபோல் 6 ஆண்டுகளில் பெறப்பட்ட ஒட்டு மொத்த சான்றிதழ்கள் 79. இதில் இந்த ஆண்டு மட்டும் 45 சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமி தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் மருந்து கிடங்குகள் உள்ளது. இந்த 32 மாவட்டங்களில் உள்ள மருந்து கிடங்குகள் மூலம் ரூ.326.92 கோடி மதிப்பீட்டில் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட்டுள்ள மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்பட்டு, தற்போது கையிருப்பில் உள்ள மருந்துகள் தொகை ரூ. 240.99 கோடி. இதற்கு பிறகும் எடப்பாடி பழனிசாமிக்கு மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்குமேயானால் வாருங்கள், நானும் உடன் வருகிறேன், நேரடியாக சென்று ஆய்வு செய்வோம். மேலும் மருத்துவர்கள் பணியிடங்கள் 1021, மருந்தாளுநர் பணியிடங்கள் 986, சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் 1,066, கிராம சுகாதார செவிலியர்கள் 2,222 மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.