Friday, February 23, 2024
Home » தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த தயார் நிலையில் இருக்கிறோம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த தயார் நிலையில் இருக்கிறோம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

by Arun Kumar

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் சென்னையில் 2வது நாளாக ஆலோசனை நடத்தினர். நேற்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எஸ்பிக்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, வாக்காளர் பட்டியல் நிலை, வாக்குப்பதிவு எந்திரங்களின் தயாராக வைத்திருப்பது, ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் பயிற்சி குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று தேர்தலுக்கான முன்தயாரிப்பு பணிகள் குறித்த 2வது நாள் ஆலோசனை கூட்டம், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அப்போது மத்திய, மாநில அரசுகளின் செயலாக்க துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக பங்கேற்று அந்தந்த மாவட்ட தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வெளி மாநில போலீசார் எவ்வளவு தேவைப்படும், பதட்டமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். அதேபோன்று வாக்காளர்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 6 மணி வரை நடைபெற்றது.

ஆய்வு கூட்டம் நிறைவடைந்த பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். எந்த அளவில் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பது பற்றி ஆய்வு செய்தனர். தேர்தல் நடத்த நாங்கள் தயார் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று காலை 10 மணிக்கு, புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர், டிஐஜி விஜயேந்திரகுமார் யாதவ், புதுச்சேரி மாநிலத்துக்கு உட்பட்ட கலெக்டர்கள், எஸ்பிக்கள் பங்கேற்றனர்.

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்தில் இரண்டு நாள் ஆலோசனையை முடித்துக் கொண்டு நேற்று இரவு 9 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றனர். தமிழகத்தில் நடத்திய 2 நாள் ஆலோசனையின்போது தெரிவித்த கருத்துக்களை டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் அறிக்கையாக அளிப்பார்கள். அதன் அடிப்படையில், தமிழகத்தில் எப்போது நாடாளுமன்ற தேர்தல் எந்த தேதியில் நடத்துவது, தேர்தல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

You may also like

Leave a Comment

11 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi