பொன்னேரி: பொன்னேரியில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணி உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகளை நேற்று சட்டமன்ற பொது கணக்கு குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். அப்போது, தமிழகத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி குறைக்கப்பட்டு உள்ளது என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தகவல் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீஞ்சூர் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணி, அனுப்பம்பட்டு ஊராட்சியில் பழங்குடியினர் குடியிருப்பு கட்டுமான பணி உள்பட பல்வேறு பணிகளை நேற்று மாலை சட்டமன்ற பொது கணக்கு குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் அப்பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பெற்று கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேசுகையில், கடந்த 2014ம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்கி வந்தது. தற்போது கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் நிதி குறைக்கப்பட்டு மாநில அரசு மட்டும் 72 சதவீதம் வரை நிதி வழங்கி வருகிறது.
எனினும், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக மாநில அரசு நிதி வழங்கி வருகிறது. ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டாலும், மக்களை கைவிட மாட்டோம் என்று தமிழக முதல்வர் நிதி வழங்கி வருகிறார் என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தகவல் தெரிவித்தார். மேலும், மீஞ்சூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை 4 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறத்தியுள்ளோம் என்று தெரிவித்தார். இந்த ஆய்வில் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.