சேலம்: தமிழ்நாட்டு கொள்கையை மாற்ற சொல்ல ஒன்றிய அரசுக்கு உரிமை கிடையாது என்று அன்புமணி தெரிவித்து உள்ளார். பாமக தலைவர் அன்புமணி சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற ஒரு அச்சம் நிலவுகிறது. தமிழ் நாட்டின் உரிமையை நாம் என்றும் இழக்கக்கூடாது.
ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்ததால் நிதி தர மாட்டோம் என்று கூறுவது தவறாகும். ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தால் ஏற்பதும், ஏற்காததும் மாநில அரசின் உரிமையாகும். தமிழகத்தில் இருமொழி கொள்கைகள் கடந்த 60 ஆண்டாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. எந்த மொழியும் திணிக்கக்கூடாது. எல்லா மொழியும் கற்றுக்கொள்ளலாம். தமிழ்நாட்டிற்கு ஒரு கொள்கை உள்ளது. அந்த கொள்கையை மாற்றச் சொல்லும் உரிமை ஒன்றிய அரசுக்கு கிடையாது. அதிமுக கூட்டணியில் எனக்கு எம்.பி., சீட் தருவதாக கூறுவது தவறான செய்தியாகும்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.