நெல்லை: ‘தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வர வேண்டாம்’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். சர்வதேச ேயாகா தினத்தையொட்டி பாளை. அழகர் நகர் பூங்காவில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற உத்தரவை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது வரவேற்கதக்கது. முருக பக்தர்கள் மாநாடு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டிற்கு 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள். இதில் கட்சி பேதமின்றி பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. ஒன்றிய அரசின் திட்டங்களைத்தான் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ் உலகத்திலேயே சிறந்த மொழி. தமிழ் மொழி மீது பிரதமர் அளவற்ற மரியாதை வைத்துள்ளார். திருக்குறளை 6 மொழிகளில் ஒன்றிய அரசு மொழி பெயர்ப்பு செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி, தமிழை போற்றி பேசியுள்ளார். எங்கு சென்றாலும் அவர் தமிழை பற்றித்தான் பேசுகிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளது. பாஜ கூட்டணிக்கு பிற கட்சிகள் வருவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக இருப்பதுதான் இலக்கு. பிரதமர் நரேந்திரமோடிக்கு அதிகப்படியான வேலை உள்ளது. அவர் தமிழ்நாட்டுக்கு வர வேண்டியதில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பார்த்துக் கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.