திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடி ஊராட்சி பெருங்குடியில் பெரியார் சமத்துவபுரத்திற்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
இதில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:
ஒரு ஆட்சியின் மீது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக, அந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று சொல்வது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையான ஒன்று. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று கூறியதற்கு சிலர் விமர்சனம் செய்திருக்கின்றனர்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் எல்லா சம்பவங்களும் அதிகம் தான். எனவே தமிழ்நாட்டை அமைதி பூங்கா என்று சொல்வதில் எந்த தவறும் கிடையாது.தமிழ்நாடு அமைதி பூங்கா என்பதற்கு, ஏராளமான தொழிலதிபர்கள் இங்கு தொழில் தொடங்க வருவதே சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழ்நாடு அமைதி பூங்கா என்பதில் மறு பேச்சே கிடையாது. இவ்வாறு கூறினார்.