சென்னை: தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகிறது. அது மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். அதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த மாதம் உருவான புயலுக்கு பிறகு தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இவை தவிர, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் பலத்த மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ வேகம் முதல் 55 கிமீ வேகத்தில் வீசும். அதேபோல அந்தமான கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று வீசும். இதே நிலை 17ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.