சேலம்: தமிழ்நாடு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் பாதைகளை தீவிரமாக கண்காணிக்க கோட்டம் வாரியாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழையின் போது, தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் மழைநீர் தேங்கினால், உடனுக்குடன் அதனை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்திட கோட்ட பொறியியல் பிரிவு மற்றும் இயக்கப்பிரிவு ஊழியர்களை கொண்டு மேற்கொண்டு வருகின்றனர். மழை காலத்தில் தண்டவாளத்தின் திறத்தன்மையை அவ்வப்போது, பொறியியல் பிரிவு ஊழியர்கள் கண்காணிப்பார்கள். இவர்கள், தினமும் குறிப்பிட்ட தூரத்திற்கு தண்டவாள பாதையில் சென்று, சீரமைப்பை மேற்கொள்கின்றனர். இதற்காக காலை மற்றும் மாலை நேரத்தில் கீமேன், கேங்மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் தண்டவாளத்தை ஆய்வு செய்கின்றனர்.
மழையின் காரணமாக மண் பொதும்பி, தண்டவாள பகுதியில் கூடுதல் ஜல்லிக்கற்கள் கொட்ட வேண்டும் என கணித்தால், உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். இந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்-கோவை, சேலம்-கரூர், சேலம்-ஜோலார்பேட்டை, சேலம்-விருத்தாச்சலம் ஆகிய மார்க்கங்களில் தண்டவாள கண்காணிப்பு பணிக்கு பொறியியல் பிரிவு, இயக்கப்பிரிவு ஊழியர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், தொடர்ந்து தண்டவாள கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் தேங்கும் என கணிக்கப்பட்ட இடங்களில், தண்ணீர் தேங்காமல் இருக்க சிறிய அளவில் கால்வாய் வெட்டி விடுகின்றனர். மேலும், அதிகளவு மண்ணும் கொட்டி வருகின்றனர்.அதேபோல், தண்டவாள பகுதியில் செடி, கொடிகள் முளைத்து வராமல் இருக்க களைக்கொல்லி மருந்தையும் தெளித்து வருகின்றனர்.
குறிப்பாக ரயில்வே கேட் இருக்கும் இடங்களில் அதன் கருவிகள் பழுதுபடாமலும், அவ்விடத்தில் செடி, கொடிகள் வளராமல் இருக்க களைக்கொல்லி அடிக்கின்றனர். இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘பருவமழை காலம் என்பதால், தண்டவாள கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கீமேன், கேங்மேன்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காலை, மதியம், மாலை என 3 முறை ரோந்து செல்கின்றனர். தண்ணீர் தேங்கும் என கணிக்கப்பட்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இனிமேல், லோகோ பைலட்டுகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் தண்டவாளங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். இத்தகைய பணியை தொடர்ந்து செய்து, ரயில் போக்குவரத்தை சீராக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.