சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ₹776.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,046 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டம், செனாய் நகரில் ₹131 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கே.கே நகரில் ₹51 கோடியே 29 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகள், செங்கல்பட்டு மாவட்டம் ராஜகுளிப்பேட்டையில் ₹43 கோடியே 81 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 116 அடுக்குமாடி குடியிருப்புகள்; சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டம் நெற்குன்றத்தில் ₹433 கோடியே 59 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 570 அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் செங்குளத்தில் ₹116 கோடியே 55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 464 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் ₹776 கோடியே 51 லட்சம் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, தலைமை செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சமீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.