சென்னை: நாட்டிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி என்று பொன்முடி கூறினார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற ‘உலக அரசியலமைப்பு நாள்’ நிகழ்ச்சி நேற்று முடிவுற்றது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ‘இந்திய அரசியலமைப்பின் தற்போதைய சூழ்நிலை – அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள்” என்ற ஆய்வு நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: பொது நிர்வாக மேலாண்மை மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பட்டப்படிப்புகளை பயிலும் மாணவர்கள், இந்திய அரசியலமைப்பு, உலக அரசியலமைப்பு குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் கருப்பர்கள், வெள்ளையர்கள் என நிலவியது. அதேநேரம், இந்தியாவில் ஜாதி, மதம் ரீதியிலான வேறுபாடுகள் காணப்பட்டன. சாதி ரீதியாக வேறுபாடுகள் இருக்க கூடாது, அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு திராவிட இயக்கங்கள் உருவாகின. அன்றைய காலகட்டத்தில், அடித்தட்டு மக்கள் படிக்க முடியாத சூழ்நிலை இருந்தது.
இப்போது, இடஒதுக்கீடு மூலம் அனைரும் படிக்க தொடங்கி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் சிலருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, இப்போது அனைவருக்கும் கிடைக்கிறது. சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதில், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் அடங்கும். நாட்டிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது திராவிட மாடல் ஆட்சியின் வளர்ச்சி. மாணவர்கள் பாடப்புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது, பொது அறிவுகளையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஆறுமுகம், அரசியல் அறிவியல் பிரிவு பேராசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.