சென்னை: கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இதற்கிடையே கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், மார்ச் 1ம் தேதியும் இதேநிலை நீடிக்கும். அதற்கு அடுத்த நாட்களில் படிப்படியாக வறண்ட வானிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 3ம் தேதி வரையில் வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. அதிக வெப்பநிலை சற்றே குறையும்.