சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல் நடத்துவதை ஒன்றிய பாஜ அரசு வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது என்று துரை வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தலைமன்னார் – தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, ஒரு விசைப்படகையும் அதில் பயணித்த 8 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் நாகப்பட்டினத்தை சேர்ந்த 11 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடல் படையினர் கைது செய்து உள்ளனர். தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அழித்து வருவது கண்டனத்துக்குரியது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களையும், மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது. இலங்கை கடற்படையினரின் இத்தகைய அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.