ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 28 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலிக மீன்பிடிக்க சென்றனர். வழக்கம்போல நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 10க்கும் மேற்பட்ட படகுகளை வழிமறித்து நடுக்கடலில் நிறுத்தி விசாரித்துள்ளனர்.
நீண்டநேரத்திற்குப் பின் படகுகளில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பாஸ்கரன் பெர்னாண்டோ, கென்னடி, சர்புதீன், பாம்பனை சேர்ந்த சந்தியா ஆகியோருக்கு சொந்தமான பெரிய மற்றும் சிறிய 4 படகுகளை 23 மீனவர்களுடன் சிறைபிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
இதுபோல் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் தீவுப்பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகையும், அதிலிருந்த 5 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இரவோடு இரவாக அழைத்து சென்றனர். இரவு முழுவதும் படகிலேயே இருந்த தமிழக மீனவர்கள் குணசேகரன், ராமநாதன், பாலு, பிரிமன், சந்தியா, மிதுன், சேவியர், ஜஸ்டின், அருள்தாஸ், ரீகன், முருகன், கார்த்திக், ஜார்ஜ், கிளிங்டன், மோபின், குமார் உட்பட 28 தமிழக மீனவர்களிடமும் இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையின் சிறைபிடிப்பு நடவடிக்கையை தொடர்ந்து அச்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இரவு முழுவதும் மீன்பிடித்து இன்று அதிகாலை கரை திரும்பினர். கரை வந்து சேர்ந்த படகுகளில் மீன்பாடு குறைவாக இருந்தது. நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 28 பேர் ஐந்து படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.