Thursday, April 25, 2024
Home » தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

by MuthuKumar

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் முதல் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படத்தப்பட உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 5320 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிவந்த நிலையில் கடந்த ஆண்டு அரசு அறிவிப்பின்படி 500 டாஸ்மாக் கடைகள் முடப்பட்டது. இதையடுத்து தற்போது தமிழகத்தில் 4,820 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் காலி மது பாட்டில் அங்காங்கே வீசி செல்வதால் குப்பை அதிகரிக்கிறது. தமிழகத்தில் நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு மது வங்குவோரிடம் இருந்து கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது.

இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து ரூ.10 திரும்ப பெற்று செல்கின்றனர். இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் நீதிமன்றமும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீலகிரியை தொடர்ந்து ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலை மாவட்டங்களிலும், அதனை தொடர்ந்து கோவை, பெரம்பலூர், தருமபுரியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த ஆண்டு இறுதியில் நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான டெண்டரை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் மலை மாவட்டங்களிலும், ஒரு சில மாவட்டங்களிலும் முழு அளவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் தவிர தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டது. ஆனால் நகர பகுதிகளில் காலி பாட்டில்களை சேமிக்க போதுமான இடமில்லை என பணியாளர்கள் தெரிவித்தனர். தற்போது அதற்கான தீர்வு காணப்பட்டுள்ளது. அனைத்து மதுக்கடைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வழியாக மதுபாட்டில் திரும்ப பெறப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. 28ம் தேதி டெண்டர் இறுதி செய்யப்பட்டு காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்படும். வரும் ஏப்ரல் முதல் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து மதுக் கடைகளிலும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

three × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi