சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியது. அதிலும் சில தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி, தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பின்மை, உட்கட்சி பூசல் என பல்வேறு புகார்களை கட்சி நிர்வாகிகள் தெரிவித்தாக தகவல்கள் வெளியானது. அத்துடன் கட்சியை பலப்படுத்த பிரிந்திருக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், தொடர் தேர்தல் தோல்விகளுக்கு காரணமான மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.