சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் திடீரென ஒன்றிய உள்துறை அமித்ஷா சென்னைக்கு வந்தார். அப்போது கூட்டணிக்கு வர மறுத்த அதிமுகவை, எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்கள் மீது உள்ள சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளை காட்டி மிரட்டி பணிய வைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா மற்றும் எடப்பாடி இணைந்து கூட்டணி அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது அமித்ஷா கூறும்போது, தமிழ்நாட்டில் பாஜ கூட்டணி ஆட்சி அமையும் என்றார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘அமித்ஷா கூட்டணி ஆட்சி பற்றி எதுவுமே சொல்லவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும்’’ என்று மறுத்து பேசினார். இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் மதுரையில் அண்மையில் நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 2026ல் பாஜ அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். அமித்ஷாவின் இப்பேச்சு அதிமுகவினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது தொடர்பாக அதிமுக தரப்பில் அமைதி காத்து வருகின்றனர்.
பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘‘தமிழ்நாட்டில் பாஜ-அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமையும் வகையில் அதிமுக 2 தொகுதியில் போட்டியிட்டால், பாஜ ஒரு இடத்தில் போட்டியிடவேண்டும் என்ற வகையில் தொகுதிகளை பிரிக்க வேண்டும். ஒரு சில சட்டமன்ற தேர்தலில் பாஜ 2ம் இடம் வந்தது. அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 19.4 % ஓட்டுகள் கிடைத்தது. பாஜ கூட்டணி 11.4 % ஓட்டுக்கள் பெற்றது. அதிமுக- பாஜ பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பெறவேண்டும்’’ என்று தெரிவித்து இருந்தார். அதன்படி பாஜ 78 தொகுதிகளை கேட்கிறது. அண்ணாமலையின் இந்த கடிதம் எடப்பாடி மற்றும் அதிமுக தலைவர்கள், தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. அண்ணாமலை திட்டமிட்டே அதிமுக-பாஜ கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறிவருகிறார். பாஜவில் அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என கடுமையாக சாடி இருந்தனர். அதே நேரத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழக பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியை, பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நடந்தது. அப்போது கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற அண்ணாமலை தான் காரணம். மீண்டும் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறும் நிலை வரக்கூாது. எனவே, கூட்டணி தொடர்பாக அண்ணாமலை பேச தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி: கூட்டணி குறித்து அமித்ஷா என்ன சொன்னாரே அது தான் கட்சியின் நிலைப்பாடு. அமித்ஷா என்ன சொன்னார். தேசிய ஜனநாயக கூட்டணி என்று வரும் போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு மாதிரி உருவெடுக்கும். பீகாரில் வேறு மாதிரி உருவெடுத்துள்ளது. அங்குள்ள மாநில கட்சிக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே மாதிரி தமிழகம் என்று வரும் போது, தேசிய கட்சியாக இருந்தாலும் மாநில கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இது தேசிய ஜனநாயக கட்சிக்கு புதிதல்ல. தமிழகத்தில் பெரிய கட்சி, ஏற்கனவே ஆண்ட கட்சி அதிமுக. அதனால், அதனோடு சேர்ந்து தேர்தலை சந்திப்போம். தலைமையை பொறுப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதை முன்னெடுத்து நடத்தி செல்வார் என்று சொல்லியிருக்கிறார். அதற்காக மற்ற தலைவர்கள் எல்லாம் அவர் கூட போக மாட்டார்கள் என்பதல்ல. எல்லா கூட்டணி கட்சி தலைவர்களும் அவரோடு பணியாற்ற போகிறார்கள். ஆக இதில் வேறுபாடு ஏற்படுத்துவதை, விமர்சனம் செய்வதை நாம் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கட்சியின் என்ன நிலைப்பாடு என்பதை அமித்ஷா சொல்லி விட்டார். அதை மாநில தலைவரும் சொல்லி விட்டார். அண்ணாமலையும் தெளிவாக சொல்லி விட்டார். நான் சொன்னது எனது சொந்த கருத்து என்று.
கட்சியின் கருத்தாக இருந்தால் தான் அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டும். அவர் சொந்த கருத்து என்று சொல்லும் போது, அதை சொந்த கருத்தாக தான் எடுத்து கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வமான தலைவர்கள் சொல்வது தான் கட்சியின் கருத்து. தெளிவான கூட்டணியை அமைத்து, அதற்கான தெளிவான கருத்தை சொல்லிவிட்டார். இது கூட்டணி சார்ந்த மற்ற தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியும். தனிப்பட்டவர்களின் கருத்துக்களை விமர்சனம் செய்வதற்கு நான் இங்கு இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக தமிழகத்தில் போட்டி போடும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், மேலிட பொறுப்பாளரின் சந்திப்பு குறித்து தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். அதிமுக, பாஜ கூட்டணி பற்றி அண்ணாமலை பேச கூடாது என நான் பேசவில்லை. சுதாகர் ரெட்டியிடம் அரசியல் ரீதியாக சில கருத்துகளை பரிமாறிக் கொண்டேன். பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனையை மக்களிடம் எடுத்து சொல்வது குறித்தும் விவாதித்தேன். கூட்டணி பற்றிய கட்சியின் நிலைப்பாட்டை பாஜ மேலிடம் தெளிபடுத்தி இருக்கிறது என்று கூறியுள்ளார்.