திருப்பூர்: ‘கேரள சினிமா துறையில் நடந்ததுபோல் தமிழக சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதும் பெறப்படவில்லை. அவ்வாறு புகார்கள் வந்தால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: திமுகவில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரச்சனை உருவாகி இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியுள்ளார். அவர் தினந்தோறும் செய்தித்தாள்கள் மற்றும் டிவியிலும் வர வேண்டும் என்று பேசி வருகிறார். அவரது பேச்சு ஒருக்காலும் எடுபடாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் திமுக கட்டுப்பாடுடனும் கட்டுக்கோப்பாகவும் உள்ளது. அதிமுகவின் பகல் கனவு பலிக்காது. தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு தொழிற்சாலையும் வெளி மாநிலத்திற்கு செல்லவில்லை. தமிழகத்திலேயேதான் தொடர்ந்து இயங்கி வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து கூட தமிழகத்திற்கு வந்து தொழில் செய்கின்ற நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தியது மூலம் தொழில் தொடங்க ஆர்வமுடன் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர். கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தற்பொழுது அங்கு பரபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழக சினிமா துறையில் தற்போதுவரை பாலியல் தொல்லை தொடர்பாக புகார்கள் ஏதும் பெறப்படவில்லை. அவ்வாறு புகார்கள் வரும் பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.