நெல்லை: வஉசி பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டம் தரம் குறைந்துள்ளது எனவும், மற்ற மாணவர்ளுடன் போட்டி போட முடியவில்லை எனவும் ஆளுநர் கூறியுள்ளாரே எனக் கேட்கின்றீர்கள். தமிழ்நாடு பாடத்திட்டத்தை பற்றி ஆளுநருக்கு முழுமையாக தெரியுமா அல்லது அதை சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றனரா என தெரியவில்லை.
விண்வெளியில் சந்திரயான் – 3 தரை இறக்கப்பட்டு உலகமே வியக்கும் வண்ணம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. அதன் இயக்குநர் வீரமுத்துவேல் அவரது வீட்டில் முதல் பட்டதாரி, தமிழ் வழிக் கல்வியில் அரசு பள்ளியில் படித்தவர். அவர் தான் இயக்குநராக இருந்து பெருமை சேர்த்தவர். அவர் மட்டுமல்ல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவராக இருந்த சிவன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். அவரும் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து தான் உயர்ந்த பதவிக்கு வந்தார். மயில்சாமி அண்ணாதுரை இயக்குநராக இருந்தவர்.
இந்தியாவே பெருமைப்படும் வண்ணம் இன்று விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான பதவியில் இருப்பவர்கள் வீரமுத்துவேல், நிகர் சாஜி, நாராயணன். இப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகமான விஞ்ஞானிகள் 90 சதவீதம் மேல் தமிழ் வழியில் பயின்றவர்கள். அவர்கள் தான் உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் உள்ளனர். அவர்கள் தமிழ் வழி பாடத்தில் பயின்றவர்கள் என்பது ஆளுநருக்கு தெரியுமோ, தெரியவில்லையோ? தமிழ் வழி பாடத்திட்டத்தில் படித்தவர்கள் உலகம் வியக்கும் விஞ்ஞானிகளாக உள்ளனர். அவர்களை பெருமைப்படுத்தி நமது முதல்வர் விருது வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அது தாங்க முடியாமல் சொன்னாரா என தெரியவில்லை. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.