சென்னை: சென்னை ஐ.ஐ.டி.எம் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைத்த ‘ஸ்டார்ட் அப் சென்னை – செய்க புதுமை’ நிகழ்வு நடந்தது. இதில், சமூக வளர்ச்சி சார்ந்து இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பட்டியலின, பழங்குடியின தொழில் முனைவோர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ‘பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையத்தினை’ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
பெரியார் சமூக நீதி தொழில் வளர் மையம் மற்றும் ‘தொழில் நயம்’ என்ற பிரத்யேக உதவி மையத்தை தொடங்குவதில் பெருமை அடைகிறேன், இது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தங்கள் தயாரிப்புகளை முறையான வடிவமைப்பு மற்றும் திறம்பட சந்தைப்படுத்த வழிகாட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வணிக திறன்களை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவும் நோக்கத்தில் ‘ஸ்டார்டிஃபை’ என்ற போட்டியையும் நாங்கள் தொடங்குகிறோம்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படும் ப்ரீ-இன்குபேஷன் சென்டர்கள் என்ற சிறப்பு முயற்சியை அறிமுகப்படுத்த உள்ளோம். கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து புத்தொழில்களை ஊக்கப்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இங்கே கையெழுத்திடப்பட்டுள்ளன.
திராவிட மாடல் அரசின் கீழ், தமிழ்நாட்டில் தொழில் முனைவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. நமது அரசு பதவியேற்பதற்கு முன், 2,300 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 2,300ல் இருந்து 9,600 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஊக்கமளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த ஸ்டார்ட்அப்களில் 50% பெண்களால் வழிநடத்தப்படுகின்றன. மானியம், வங்கிக்கடன் என உங்களுக்கு பொருளாதார ரீதியா உதவிடவும், நம்முடைய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.