மதுரை: தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பெண் குழந்தைகள் முன்னேற படிக்கல்லாக அமையும் என அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த அழகு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘‘எனது 16 வயது மகள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. எனது மகளை கண்டுபிடிக்க திருப்பத்தூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, என் மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, ‘‘காணாமல் போன பள்ளி சிறுமி திண்டிவனத்திற்கு தனது தோழியுடன் சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பினால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தோழியுடன் தனியே தங்க விரும்புவதாகவும் கூறுகிறார்’’ என்றார்.
அப்போது நீதிபதிகள், ‘‘சிறுமியை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரையில் உள்ள பள்ளியில் தங்கி படிக்க வைக்க முடியுமா’’ என்றனர். இதற்கு அரசு தரப்பில், ‘‘மதுரை முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலக்குழு ஆகியோருடன் ஆலோசித்து, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்கும் விடுதி வசதி உள்ளது. அங்கேயே சிறுமி தங்கி கல்வி கற்க தமிழ்நாடு அரசின் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இலவச கல்வி, இலவச உடை, இலவச இருப்பிடம் ஆகிய திட்டத்தின் கீழ் சிறுமிக்கு கல்வியளிப்பது குறித்து ஆலோசிக்கலாம்.
அங்கு சிறுமிக்கு பாதுகாப்புடன் கூடிய கல்வி வழங்குவதில் அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அங்கு தங்கி கல்வி பயிலலாம்’’ என கூறப்பட்டது. அப்போது, நீதிபதிகள், ‘‘ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை செயல்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்கள். ஆதரவற்ற பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் உணவு, உடை, கல்வி என அனைத்தும் வழங்கும் தமிழக அரசின் திட்டம் மிகவும் பாராட்டத்தக்க திட்டம். இதுபோன்ற திட்டங்கள் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பொருளாதாரரீதியாக முன்னேற்றம் அடைய ஒரு படிக்கல்லாக அமையும். சம்பந்தப்பட்ட சிறுமியை திருமங்கலத்தில் படிக்க வைக்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.