* கார் பந்தய வீரர்களுக்கு உலகளாவிய வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி; வேலைவாய்ப்புக்கு வித்திடும்
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் கார் பந்தய வீரர்களுக்கு உலகளாவிய வாய்ப்பு கிடைப்பது மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கும் வித்திட உள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பல்வேறு வகையில் ஊக்கம் அளிக்கப்பட்டு விளையாட்டுத்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் புதிய விளையாட்டு அரங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு போட்டிகளில் பயிற்சிகள் அளிக்கப்படுவதுடன், வெளிநாடுகளுக்கு சென்று போட்டிகளில் பங்கேற்க தேவையான நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மாநில, தேசிய, வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை மாநகரில் கார் பந்தய போட்டிகளை நடத்திட அரசு முன்வந்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சீரிய முயற்சியால் இந்தியாவே வியக்கும் வண்ணம் சென்னையில் முதன்முதலாக ஃபார்முலா 4 கார் பந்தயம்
நடைபெறவிருக்கிறது.
“தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று புகழப்படும் சென்னை ஒரு செழுமையான வாகனப் பாரம்பரியத்தை கொண்டுள்ள மாநகரமாகும். புகழ்பெற்ற ஹூண்டாய், நிசான், மஹிந்திரா, யமஹா மற்றும் பாரத் பென்ஸ் போன்ற கார் நிறுவனங்களின் தாயகமாகவும் திகழ்கிறது. இந்த பின்னணியில் சென்னையில் ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்துவது நமது நகரத்திற்கு மகத்தான முக்கியத்துவத்தை ஏற்படுத்தும். இந்த போட்டி பல்வேறு நன்மைகளையும் தமிழ்நாட்டிற்கு வழங்க உள்ளது.
* இந்தியாவில் முக்கியமானஃ பார்முலா 4
கார் பந்தய போட்டி நடத்தப்படுவதன் மூலம் உலகளாவிய மோட்டார் விளையாட்டில் இந்தியாவின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க இடம் பெறும். இந்த உற்சாகமான முயற்சி இந்திய ஓட்டுநர்களுக்கு சர்வதேச கார் பந்தய வீரர்களுடன் போட்டியிடும் வாய்ப்பைத் தரும். வெளிநாட்டிற்குச் செல்லாமல், அவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறவும், இந்த நிகழ்வு இந்திய மோட்டார் வீரர்களின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது. இதுமட்டுமல்லாது, மோட்டார் பந்தய வீரர்களை முன்னேற்றுவதற்கு மட்டும் அல்லாமல் உயர்மட்ட மோட்டார் பந்தயத்திற்கான மையமாகத் தமிழகத்தை வளர்த்து நிலைநிறுத்தவும் துணைபுரியும்.
* பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பு
கிரீன்கோ ஐதராபாத் இ-ப்ரிக்ஸ் போட்டி, தெலங்கானா அரசு ஏஸ்.நிக்ஸ்ட் ஜெம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது. அதன் காரணமாக ஐதராபாத் நகரின் பொருளாதாரம் ஏறத்தாழ 84 மில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார நிலைக்கு உயர்ந்தது. சென்னை மாநகரம் மோட்டார் போட்டிகளை நடத்துவதற்கு ஒரு சிறந்த இடம். இது உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் முக்கிய இடத்தை வகிக்கும்.
* இந்திய ஓட்டுநர்களுக்கு புதிய வாய்ப்புகள்
சென்னை மாநகரில் ஃபார்முலா பந்தயங்களை அறிமுகப்படுத்துவது உள்ளூர் மோட்டார் வீளையாட்டு வீரர்களுக்கு புதிய ஆற்றலைப் புகுத்தக் கூடியதாகும். இதில் ஆர்வமுள்ள வீரர்களுக்கு மதிப்புமிக்க ஃபார்முலா 1 உட்பட அதிக அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு நேரடி பாதையை உருவாக்கும். இந்தப் போட்டி மற்ற உயர்தரப் போட்டிகளில் பங்கேற்பதற்கான உரிமங்களைப் பெறுகின்ற வாய்ப்பினையும் வழங்கும். ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையும்.
* சுற்றுலாவை வளர்க்கும்
ஃபார்முலா 4 பந்தயங்கள் ரசிகர்கள், அணிகள், போட்டிகளுக்கான ஆதரவாளர்கள், ஊடகப் பணியாளர்கள் உட்பட பலதரப்பட்ட சர்வதேசப் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
* வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதன் மூலம் பல்வேறு துறைகளில் தற்காலிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதில் பந்தய மேலாண்மை, பாதுகாப்பு, விருந்தோம்பல், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் பங்களிப்பு பொருளாதார மேம்பாடு அனைத்திற்கும் வழிவகுக்கும்.
* சர்வதேச வெளிப்பாடு
ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்துவது சர்வதேச அளவில் நடைபெறும் மோட்டார் விளையாட்டுப் போட்டிகளில் சென்னையின் நிலையை உயர்த்தி, உலகளாவிய நிகழ்வுகள், வணிக முதலீடுகள் மற்றும் கூட்டு வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனத்தை ஈர்க்கும். இது சென்னை மாநகரத்தின் பெருமையை உலக அளவில் மேம்படுத்தும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலுடன் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திட திட்டமிட்டுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், கார் பந்தய வீரர்களின் முன்னேற்றத்திற்கும் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி உலக அரங்கில் தமிழ்நாட்டின் புகழைப் பெருக்குவதில் ஒரு முக்கிய வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.
* கார் போட்டிகளுக்கான கலாச்சாரத்தை கட்டியெழுப்பும்
ஃபார்முலா 4 நடத்துவதன் பயனாக, உலகத்தரம் வாய்ந்த பந்தய உள்கட்டமைப்பை தமிழ்நாட்டில் மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளுக்கான முதன்மையான இடமாகத் தமிழ்நாட்டின் புகழை உயர்த்தும். இந்திய ரேசிங் லீக் போன்ற தளங்கள் மூலம் துடிப்பான மோட்டார் போட்டி கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், அடுத்த தலைமுறை ரசிகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஊக்கமளிப்பதற்கும் மாநிலத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி வலுப்படுத்துவதாக அமையும்.