புதுடெல்லி: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த அவசர மனு மீது வரும் திங்கட்கிழமைக்குள் முடிவெடுக்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது. டெல்லியில் கடந்த 11ம் தேதி நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராகவும், அதேபோன்று தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசின் நடவடிக்கைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் புதிய அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில்,‘‘காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை திறந்து விட உத்தரவிட வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போன்று வரும் செப்டம்பர் மாதம் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டிய 36.76 டி.எம்.சி நீரை காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று கர்நாடகா அரசு தரப்பிலும் ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட இரு அவசர மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, உமாபதி மற்றும் குமணன் ஆகியோர் வாதத்தில், ‘‘காவிரியில் இருந்து 40 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற முந்தைய உத்தரவை கர்நாடகா அரசு பின்பற்றவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்துகிறது. இதில் எங்களது தரப்பு பிரச்னைகளையும், தமிழ்நாட்டு விவசாயிகளின் சிரமங்களையும் காவிரி மேண்மை ஆணையத்தின் கூட்டத்தின் போது எடுத்துரைக்க முயற்சி செய்தோம். ஆனால் ஆணையம் அதனை நிராகரித்து விட்டது. அதனால் அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு அதிகாரிகள் வெளிநடப்பு செய்து விட்டனர்.
காவிரி விவகாரத்தை பொறுத்தமட்டில் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு, கர்நாடகா அரசு 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் கடந்த 11ம் தேதி நடந்த கூட்டத்தின் போது கர்நாடகா அரசுக்கு ஆணையத்தின் தரப்பில் அப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அது இன்றுடன்(நேற்று) முடிந்து விட்டது. இதையடுத்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடகா நிறுத்திவிடும். குறிப்பாக கடந்த 15 நாட்களாக காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கூட கர்நாடகா முறையாக பின்பற்றவில்லை.
கர்நாடகா மாநிலத்தில் மழையின் அளவு குறைவாக இருக்கும் வருடம் என்றாலும், தற்போது தமிழ்நாடு மற்றும் மாநிலத்தில் இருக்கும் விவசாயிகள் அனைவரும் மிகக் கடுமையான வறட்சி சூழலை சந்தித்து வருகின்றனர். மேலும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கர்நாடகா தண்ணீரை திறந்த விடவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்வதை தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது. என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குறுக்கிட்ட கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘கர்நாடகாவில் மழையின் அளவு என்பது இந்த ஆண்டு மிகவும் குறைவாக உள்ளது. இருப்பினும் இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு காவிரி ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 15 நாட்களாக நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட்டது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.ஆர். கவாய்,\\”இந்த விவகாரம் இரு மாநிலங்கள் தொடர்பான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதனால் கர்நாடகா அரசு கூறுவது போன்று இன்றே(நேற்று) எந்தவித உத்தரவையும் அவசரமாக பிறப்பிக்க முடியாது. அது எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும். உண்மையை சொல்ல வேண்டுமானால் நீர் பங்கீட்டை விசாரிக்க நாங்கள் ஒன்றும் நிபுணர்கள் கிடையாது. காவிரி ஆணையத்தில் தான் உள்ளனர். அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து உத்தரவில்,\\” காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள அவசர மனு குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வரும் திங்கட்கிழமை அதாவது ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.
மேலும் அன்றைய தினம் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் தீர விசாரிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், காவிரி வழக்கை வரும் செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதற்குள் இந்த விவகாரம் தொடர்பான ஒரு விரிவான அறிக்கை கொண்ட பிரமாணப் பத்திரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதில், கர்நாடகாவில் இருக்கும் மழையின் அளவு, தண்ணீர் திறப்பு மற்றும் இருப்பு, கர்நாடகா இதுவரை இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றியதா, காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு இதுவரையில் திறந்து விட்ட தண்ணீரின் அளவு மற்றும் நிலுவை நீரின் அளவு ஆகிய அனைத்தும் இடம்பெற்று இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து காவிரி வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.